ஸ்தல வரலாறு

Home  >>  ஸ்தல வரலாறு

சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் அன்னையானவல் வேப்பமரத்தடியில் காளிகாம்பளாக உருவெடுத்து  அருளாசி வழங்கி பக்தர்களை காத்ததருள் புரிந்த அன்னை தற்சமயம் அருள்மிகு. மஹாசக்தி நாகாத்தம்மன் என்ற திருநாமத்துடன் பக்தர்களை காத்தாருள் புரிகின்றாள். அன்னை தனது வாக்கினையும் பரிகாரங்களையும் திருகோயில் சன்னதியில் அருள்வாக்கு அம்மாவின் உருவில் எழுந்தருளி ஒவ்வொரு வாரமும், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரை அருள்வாக்கு வழங்கி வருகின்றாள்.

அருள்வாக்கு வழங்கும் அம்மாவோ கோகூரில் குழந்தை பருவத்தில் இருக்கும்போது நாகம்மன் என்ற அன்னையினால் ஆட்கொள்ளப்பட்டு 7 வயது முதல் 11 வயது வரை வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் இரவில் அருள்வாக்கு வழங்கி வந்தார்கள், அதன்பிறகு இடைப்பட்ட காலத்தில் சாதாரண நிலையில் திருமணம் நடந்து முடிந்து சுமார் நான்கு ஆண்டுகள் மட்டும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு 2 ஆண் குழந்தைகளை ஈன்றெடுத்து மீண்டும் அன்னையினால் ஆட்கொள்ளப்பட்டு கடந்த 21.01.2001 முதல் பதிமூன்று ஆண்டுகளாக முழுநேர இறை நினைப்புடன் அன்னைக்கு சேவை செய்யும் ஆன்மீக பணியினை அவரது வாழ்க்கை துணையான அருள்திரு. P.V.இராமமூர்த்தி சுவாமிகளின் முழுமையான ஆதரவும் மற்றும், நிர்வாக தலைமையின்கீழ் சிறப்புடன் நிகழ்த்தி வருகிறார்கள்.

                இவ்வறாக மஹா சக்தி நாகாத்தம்மன் அருளோடு அன்னையின் அருள்வாக்கு வழங்கும் அம்மாவின் ஆன்மீக பணியினை எழுத வேண்டுமானால் அவரது கோகூரில் வாழ்ந்த குழந்தை பருவம் மற்றும் அவருக்கு திருமணத்திற்கு பிறகு ஸ்ரீகண்டிநத்தத்தில் குழந்தைகள் பிறந்த பிறகு இன்று வரையிலான காலங்கள் என்று இருவேறு காலகட்டங்களாக விளக்கி எழுதினால் மட்டுமே முழுமைபெரும் என்பதால் அன்னையின் அருளோடும் அருள்வாக்கு அம்மாவின் கருத்துகளோடும் “ஸ்தல வரலாறு” என்ற இந்நூலை அன்னையின் அருள்வாக்கு தினத்தில் வழங்கிய அருள்வாக்கான “எனது புகழ் உன்மூலம் உலகமெல்லாம் பரவும்” என்ற அருள்வாக்கின்படி கோகூரில் ஆரம்பித்து ஸ்ரீகண்டிநத்தத்தில் இன்று வரை நடந்துவருவது என்று இருவேறு காலகட்டங்களாக அனைத்து இறையாளர்களுக்கு விளங்கும்விதமாக விளக்கி எழுதியுள்ளோம்.

கோகூரில் பிறந்து வளர்ந்த அருள்வாக்கு அம்மாவின் குழந்தை பருவம் பற்றிய கால வரலாறு

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கோகூர் கிராமத்தில் அஞ்சம்மாள் பக்கிரிசாமி தம்பதிக்கு இரண்டாவதாக பெண்குழந்தையாய் அருள்வாக்கு அம்மா அவர்கள் பிப்ரவரி  15 அன்று இவ்வுலகில் அவதரித்தார்கள். தெய்வ அம்சங்களோடு பிறந்து வளர்ந்த குழந்தையை, உரிய நேரத்தில் உரிய முறையில் நாகம்மன் என்ற திருநாமமுடைய அன்னை அவர்கள் ஆட்கொள்ள முடிவெடுத்து, விளையாட்டு பிள்ளையை நாகமாய் வந்திருந்து மூன்று முறை தீண்டி பற்பல அற்புதங்களை நடத்தி அனைவரையும் நம்பவைத்து இப்பூவுலகில் தோன்றியுள்ளார்கள்.

தெய்வீக குழந்தைக்கு 7 வயது இருக்கும்போது முதன் முதலில் புதன் கிழமை அன்று மாலை 04.30 மணி சுமாருக்கு ஊரின் மையத்த்திலுள்ள முத்துமாரியம்மன் கோயில் அருகில் பனம்பழம் எடுக்கையில் வலது கை நடுவிரலில் நாகமாய் வந்திருந்து தீண்டினாள், அடுத்து வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணி சுமாருக்கு மற்றக்குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில் குழந்தையின் வலது காலில் வேப்பமரத்தடியில் இரண்டாவது முறையாக தீண்டினாள், மூன்றாவதாக சனிக்கிழமை பகலில் வீட்டின் உள்ளே குதிர்மேலிருந்து இடது கையில் தீண்டினாள், இப்படியாக குழந்தையை மூன்று முறை தீண்டி விசத்தால் உடலை புனிதமாக்கி முழுவதுமாய் அன்னை ஆட்கொண்டாள். குழந்தை உடல் அக்னியாய் கொதிக்க, விஷக்கடியிலிருந்து குழந்தையை காக்க அன்னையின் விருப்பத்தையும், விளையாட்டையும் அறியாத பெற்றோரும், உற்றார் உறவினரும், வைத்தியரும் குழந்தையை நாக கடி விசத்திலிருந்து காக்கும் தீவிரமான நோக்கத்தோடு ஒன்பது விதமான விசகடி மருந்து கொடுத்து பதைபதைப்புடன், கண் விழித்து பாத்துகாத்து வந்தனர். அனைவரும் மனகவலையில் பரிதவிக்க, குழந்தையோ உடல் சூட்டால் மிகவும் மயங்கிய நிலையில் படுத்திருக்க காலம் கனிந்துவர காத்திருந்த அன்னை குழந்தையை முழுமையாக ஆட்கொண்டு குழந்தை உருவில் முதன்முதலில் கோகூர் புண்ணிய பூமியில் அருள் உருவாய் வெளிப்பட்டு அப்பொழுதே அங்கிருந்த மக்களுக்கு தனது பிறப்பின் மகத்துவதையும், சூட்சுமத்தையும் தனது திருநாமம் நாகம்மன் என்றும் அருள்வாக்காக வழங்கி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினாள். ஊர் பெரியவர்களும், முக்கியஸ்தர்களும் அன்னையின் வருகையை உறுதிச் செய்ய வைத்த பலவிதமான சோதனை குறிகளையும் சரியாக கூறி தனது அவதாரத்தின் வரவை நிருப்பித்தாள். அப்பொழுது மக்களின் மனக்குறையை போக்க ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளின் இரவில் கோகூர் பூமியில் குழந்தை உருவில் தோன்றி, அருளோடு மக்களுக்கு அருள்வாக்கு கூறியும், பரிகாரம் செய்தும் காப்பதாக வாக்கு வழங்கி குழந்தைக்கு கடிவிசத்தால் ஏற்பட்ட கடும் சுரம் நீங்கி இயல்பு நிலைப்பெற அருளினாள்.

நாகம்மன் அன்னையின் இறையருள்பெற்ற தெய்வீக குழந்தை அன்று இரவில் கண்விழித்து வீட்டருகில் தனது கரங்களால் மூன்று செங்களை நிறுத்திவைத்து மாடம் அமைத்து தீபம் ஏற்றி பூஜிக்க காலப்போக்கில் அவ்விடத்தில் புற்று ஒன்று உருவெடுத்து வளர்ந்து நாகம்மன் என்ற திருநாமத்துடன் அருள்வாக்கு வழங்கி காத்தருள் புரிந்தாள். தெய்வீக குழந்தை மலைவேம்பு குச்சியை ஒடித்து புற்று அருகே நட்டு வைக்க தளைத்து மரமானது. வளர்ந்த மலைவேம்பு பச்சிலையை பரிகாரப்பொருளாக தெய்வீக குழந்தை வழங்க அதனை உண்டு பக்தர்கள் பலன் அடைந்தனர்.

இவ்வாறாக ஏழு வயதில் குழந்தை உருவில் தோன்றிய அன்னை எண்ணற்ற மக்களுக்கு அருள்வாக்கு வழங்கியும், அப்பொழுதே பரிகாரங்கள் பல செய்து தோஷங்களை நீக்கியும், நோய்கள் பலவற்றை தீர்த்தும், குழந்தை பேறு இல்லாது ஏங்கிய பெண்களுக்கு குழந்தைபேறு வழங்கியும், ஏவல் பில்லி சூன்யங்களிருந்து விடுதலை கிடைக்கச் செய்தும் பல விதத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்கி காத்தாருள் புரிந்து வந்தார்கள்.

 விளையாட்டு பிள்ளையை இருந்த குழந்தை வினை தீர்க்கும் அன்னையாய் மாறி அம்மன் அருளால் அவரது தந்தையால் பல ஊர்களுக்கு சுமந்து செல்லப்பட்டு அவரவர் இல்லத்தில் நேரிடையாக பல பரிகார பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தார்கள். தெய்வீக குழந்தைக்கு பதினொன்று வயது இருக்கும்போது அருள்வாக்கு கிழமையில் ஒருநாள் தோன்றி, அருள்வாக்கினால் தான் இன்றுடன் குழந்தை மூலம் அருள்வாக்கு வழங்குவதிலிருந்து விடைபெறுவதாகவும், மீண்டும் இப்பூமியில் இன்னும் ஒன்பது ஆண்டுகள் முடித்து தெய்வீக குழந்தை வளர்ந்து குமரியாக திருமணம் முடித்து குழந்தை பேறு பெற்று இருக்கும்போது நான் மீண்டும் ஆட்கொண்டு அவர் வாழும் இடத்திலிருந்து நாகாத்தம்மன் என்ற திருநாமத்துடன் அனைவருக்கும் அருள்வாக்கு வழங்கி அருளாட்சி புரிவேன் என்று கூறி விடைபெற, அதுவரை அவ்விடத்தில் மரமாய் வளர்ந்து மருந்தாய் விளங்கிய மலைவேம்பு மரமும் பூமியில் சாய்ந்து காய்ந்து போனது. இக்கால கட்டத்தில் கோகூர் புற்றடியில் புதிதாக வளர்ந்த நார்த்தை மரம் ஒன்று நன்றாய் வளர்ந்து தொடர்ந்து காய்த்து அம்மன் விடைபெற்ற காலங்களில் கோகூர் அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு மருந்தாகி வந்தது. இப்படியாக கோகூர் பூமியில் நாகம்மன் அவதரித்து குழந்தை உருவில் அருள் வாக்கு வழங்கிய இடத்தில் ஒரு சிறிய கோயில் நிர்மாணித்து மக்கள் பூஜை செய்து வேண்டுதல் நிறைவேற பலன்பெற்று மகிழ்ந்து வருகிறார்கள். அவ்விடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அருள்வாக்கு அம்மா அவர்கள் பரிவாரங்களோடு கோகூர் சென்று சிறப்பு வழிபாடு, அருள்வாக்கு மற்றும் அன்னதானம் செய்து வருகிறார்.

ஸ்ரீகண்டிநத்தம் மஹாசக்தி நாகாத்தம்மன் திருகோவில் உருவாக்கம் மற்றும் அருள்வாக்கு நிகழ்வுகள்

நாகை மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் (நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர்) கி.மீ. 9/4-ல் கோவில் கடம்பனூரிலிருந்து வடக்கில் செல்லும் குறுக்கு சாலையில் பயணித்தால் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் வருவது ஸ்ரீகண்டிநத்தம் என்னும் புண்ணிய பூமியாகும், சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கடம்பனூரில் சிவபெருமானும், ஸ்ரீகண்டிநத்தத்தில் காளிகாம்பாளும் எழுந்தருளி மக்களுக்கு அருளாசி புரிந்து வந்துள்ளனர், அதில் ஸ்ரீகண்டிநத்தம் காளிகாம்பாள் சன்னதி காலபோக்கில் சிதிலமடைந்து முழுமையாக சிதைந்து அவ்விடம் முழுமையான கிராம குடியிருப்பு பகுதியாக மாறிப்போனது.

ஸ்ரீகண்டிநத்தம் கிராமத்தில் வெள்ளைச்சாமி காளியம்மன் தம்பதிக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதிரியுடன் தலைமகனாக அவதரித்தார் ஆன்மீக செம்மல் அருள்திரு. P.V. இராமமூர்த்தி சுவாமிகள், இவர்களின் குடியிருப்புதான் முன்பு காளிகாம்பாள் கோயிலாக இருந்த இடமாகும். இறைவனின் விளையாடலில் இதுவும் ஒன்றாக குழந்தை பருவத்தில் கோகூரில் அருள்மிகு. நாகம்மன் ஆட்கொண்டு அருள்வாக்கு வழங்கிய அம்மாவும், நானூறு ஆண்டுகளுக்குமுன் காளிகாம்பாள் ஆட்சி செய்த பூமியில் தலைமகனாக பிறந்து அருள்திரு. P.V. இராமமூர்த்தி சுவாமிகளும் இறையருளால் திருமணம் புரிந்து நான்காண்டு குடும்ப வாழ்க்கையில் கஷ்டங்கள், துன்பங்கள், சங்கடங்கள், சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் என்று பலவிதமான இறை சோதனைக்கு ஆற்படுத்தப்பட்டு அதிலும் ஒரு ஆறுதலாக இறையருளால் இரு செல்வங்களாம் செல்வமூர்த்தி, செல்வேந்திரன் என்ற அருள் குழந்தைகளை ஈன்றெடுத்து வாழ்ந்து வந்த காலக்கட்டத்தில் கோகூர் அன்னையின் முன்தைய அருள்வாக்குபடியான நிகழ்வுகள் தொடங்கும் காலமும் வந்தது.

இரவில் அழுத குழந்தைக்கு அம்மா அவர்கள் பால் கொடுத்து கொண்டுருக்கும் வேலையில் சிலிர்த்தெழுந்த அன்னை நாகாத்தம்மன் தை மாத இரவில் 21.01.2001-ல் மீண்டும் அருள்வாக்கு அம்மாவை ஆட்கொண்டாள்.  குமரியாய் மாறிவிட்ட கோகூர் அம்மாவின் உருவில் மறுபிரவேசம் மேற்கொண்ட அன்னை வீட்டின் கிழக்குபுறமிருந்த குளத்தில் நீராடி அருளோடு ஓடினார், கோவில் கடம்பனூர் சிவாலயம் அருகில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அன்னையின் வரவை அவரது உக்கிரத்தாலும், ஓடிய ஓட்டத்தாலும் அறிந்த கிராம போதுமக்கள் பின்தொடர்ந்து ஓடி கோயிலில் ஒன்றுகூட அன்னை பொழிந்தாள் அருள்வாக்கு அவரது மறுபிரவேசத்தின் விளக்கமும் முந்தைய குழந்தை பருவம் மற்றும் தற்போதைய நோக்கமும் உரைத்து அத்துடன் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிறுக்கிழமை இரவில் வந்திருந்து கேட்போருக்கு வாக்கு சொல்வதாக அறிவித்தாள்.
அன்னையின் மறுபிரவேசத்தையும், அருள்வாக்கினை முழுமையாக நம்ப மறுத்தோறுகள் பலவிதமான சோதனைகளையும், சவால்களையும் முன் வைக்க மனம் வந்து ஏற்று சோதனைகளை எல்லாம் நிரூபித்து, கேட்டவற்றை கிடைக்கச் செய்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு அருள்வாக்கு கிழமைகளில் வந்தமர்ந்து காத்திருக்கும் பக்தர்கள் அனைவரையும் முழுமையாக சோதித்தறிந்து அவர்களின் வருகையின் நோக்கம் உணர்ந்தும், தனது வருகையை நம்பவைத்து பலவிதமான வாக்கினையும் பரிகாரங்களையும் செய்து இரவு பத்து மணிக்கு தொடங்கி அதிகாலை மூன்று மணி வரை அருள்வாக்கு வழங்கி வந்திருந்த மக்களையும், பக்தர்களையும், திருபணியாளர்களையும் காத்தருள் புரிந்தார்கள். காலத்தின் மாற்றத்தாலும் பக்தர்கள் இரவில் நீண்ட நேரம் கண்விழித்து ஏன் ஒருசிலர் உறங்கிவிட அவர்களை அம்மன் திருநீர் தூவி எழுப்பியும் அருள்வாக்கு வழங்கிட அதன்பிறகு அதிகாலையில் தங்களது வீட்டிற்கு சென்று அவர்களது அன்றாட கடமைகளை நிகழ்த்துவதில் ஏற்படும் சிரமங்களையும், பக்தர்களின் திரளான வருகையால் ஸ்ரீகண்டிநத்தம், கோவில் கடம்பனூர், ஆழியூர் என்ற பல ஊர்களில் இரவில் ஆள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவதால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை போக்கும்விதமாக தற்பொழுது இரவில் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை அருள்வாக்கு வழங்கி வருகிறார்கள்.

தெய்வீக தம்பதிகள் வாழ்ந்த முந்தைய வீட்டின் மண் சுவற்றில் ஒரு புடைப்புவர அதனை தோண்டினாள் சுவற்றின் உள்ளே நாக குடும்பத்தின் அடையாளங்களாய் முட்டையும், குட்டி பாம்புகளும் நிறைந்திருக்க, குடியிருப்பு சுவற்றில் உள்ளவற்றில் இருக்கும் அவைகளை அழிக்கும் நோக்கில் அருள்திரு. இராமமூர்த்தி சுவாமிகளின் பெற்றோர் சுவர்களை இடிக்க துவங்கி சுவர் முழுவதுமாக பரவியிருக்கும் நாக குடியிருப்பை அகற்ற தொடர்ந்து இடிக்க மொத்த வீடும் இடிக்கப்பட்டு தரைமட்டமானது. பெரிய குடியிருப்பு வீடு இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக ஒரு குடிசை வீடு கட்டி அதில் குழந்தைகளோடு கிராமத்தில் வாழ்ந்தபோதும் அன்னையின் அருள்வாக்கும் கோவில்கடம்பனூர் காளியம்மன் திருக்கோயிலிலேயே பல ஆண்டுகாலமாக தொடர்ந்து பக்தர்களின் கூட்டமும் நிறைந்தது.

இவ்வாறாக வாக்கு சொல்லும்போது ஒருநாள், அம்மன் நாகமாக ஊருக்கு கிழக்கில் மீன்வலையில் சிக்கி தவிப்பதாகவும், தனக்கு ஆயுள் காலம் முடியும் தருவாய் நெருங்கிவிட்டதாகவும் கூறி தன்னை மீட்டுவர கூறியும், இவர்கள் குடியிருக்கும் குடிசை வீடுதான் தனது பூர்வீகம் என்ற விபரத்தை முழுமையாக கூறி அவ்விடத்தை மீண்டும் தனக்கு கொடுத்துவிடவேண்டுமென்று கூறி தான் இறந்த பிறகு அந்த குடிசை வீட்டின் உள்ளேயே தரையில் புதைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி, அருள்வாக்கு அம்மா அவர்களும் நிர்வாகியும் ஸ்ரீகண்டிநத்தத்திற்கு கிழக்கில் தேடி சென்று மீன்வலையில் சிக்கி தவித்த நாகத்தை மீட்டு கொண்டுவர அருள்வாக்குப்படி இறந்துவிட , புதைக்கப்பட்டதால் அவர்களின் குடியிருப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு ஒரு கூரைவீடு அமைத்து வாழ்ந்து வந்தபோது அருள்வாக்கு தொடர்ந்து நடந்து வந்தது.
புதிதாக அமைத்த அம்மா அவர்களின் கூரைவீற்றருகில் ஒரு நாகம் வயதான நிலையில் ஆயுள்முடியும் தருவாயில் இருப்பதாக வாக்கில் கூற அவ்விடம் சென்று தேடிப்பார்த்தபோது நிலைதடுமாறிய நிலையில் ஒரு நாகம் கிடக்க மீட்டு குடிசைக்கு கொண்டுவர இறந்துவிட பூர்வீக இடத்தின் முந்தைய நாக சமாதிக்கு அருகில் இதுவும் புதைக்கப்பட்டது. மூன்றாவதாகவும் ஒரு பெரிய நாகம் வாக்குப்படி நாகை தேசிய நெடுஞ்சாலை அடிபட்டு கிடக்க அதனை அருள்திரு. இராமமூர்த்தி சுவாமிகள் எடுத்துவர அதுவும் இறந்துவிட மூன்றாவதாகவும் மொத்தமாகவும், மூன்று நாகங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு பால் ஊற்றி, பூஜை செய்து துதிக்கப்பட அடையாளமாக ஒரு வேப்பங்குச்சி ஒடித்து நட்டு வைத்து தினமும் அவ்விடத்தில் பால் ஊற்றிவர, அவ்வெப்பங்குச்சியில் மூன்று இலைகள் மட்டும் துளிர்விட்டது.இப்படியாக மூன்று நாக உடல்கள் புதைக்கப்பட்ட அன்னையின் பூர்வீக இடத்தில் புற்று ஒன்று தோன்றி வளர்ந்தது, அதனை போற்றும்விதமாகவே புற்றடி அம்மன் உருவாக்கப்பட்டு தொடர் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. இவ்வாறாக புற்றாக அன்னை தோன்றிய இடத்தில் அன்னையின் அருள்வாக்குப்படி புதிய கருவறை அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்திவர தொடர்ந்த அருள்வாக்கில், இனிவரும் காலங்களில் தனது பூர்வீக இடமான ஸ்ரீகண்டிநத்தம் பூமியிலிருந்து அருள்வாக்கினை தொடர்வதாகவும், பக்தர்கள் அங்குவந்து தொடர்ந்து அருள்வாக்கு மற்றும் பரிகாரம் பெறலாமென்றும், அவ்விடத்திலேயே தனக்கு அனைத்து அம்சங்களோடு புதிய திருக்கோயில் நிர்மானிக்கவும் உத்தரவிட்டார்கள். அன்னையின் அருள் ஆணையின்படி அருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் விக்கரகங்கள் நிர்மானம் செய்யப்பட்டு திருக்கோயில் கட்டுமானம் முடித்து, கருவரை விரிவுப்படுத்தப்பட்டு மூலவர் அம்மன், சுதை வடிப அம்மன் விக்ரங்கள் அமைத்து உள் சுற்றுபிரகாரம், பலிபீடம், துவார பாலகர்கள் சுதை சிற்பங்கள் அனைத்தும், மின் விளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

உள் பிரகாரத்தில் மஹா கணபதி விக்கிரகம் கன்னி மூலையிலும், எல்லையம்மன் வடக்கிலும், வடகிழக்கில் உள்ளடக்கிய புற்றடி அம்மனும் அமைக்கப்பட்டு சுவர்களில் நவதூர்க்கை, அஸ்டலெக்ஷ்மிகள், சிவன் பார்வதி, நாகாத்தம்மன் திருவுருவ ஓவியங்களும் தீட்டப்பட்டது. மஹாசக்தி நாகாத்தம்மன் அருள்வாக்கு வழங்கி வரும்போது அவரது வாக்கு மூலமாக முந்தைய கோகூர் அம்மன் ஆலயம் சிறிய அளவில் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதை உணர்ந்து அவரையும் இங்கு கூட்டி வந்து சேர்க்குமாறு ஆணையிட அருள்வாக்கு அம்மா அவர்கள் கோகூர் சென்று அங்கு ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த அம்மன் விக்கிரகத்தை எடுத்து வந்து அன்னை ஆலய உள் பிரகாரத்தின் வடமேற்கு மூளையில் நிர்மானம் செய்தார். இத்திருக்கோயிலில் பக்தர்கள் ஏற்றும் அனைத்து பரிகார நெய் தீபங்களும் கோகூர் அம்மன் பிரகாரம் முன்பு ஏற்றுமாறு வாக்களிக்க இன்றும் அப்படியே நடந்தேறி வருகிறது. இப்படியாக கோகூர் அம்மனும் ஸ்ரீகண்டிநத்தம் மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயிலுக்கு வருகை புரிந்துவிட்டதால் கோகூர் புற்றடியில் வளர்ந்து காய்த்து வந்த நார்த்தை மரமும் காய்ந்து போய்விட்டது. அருள்வாக்கு ஆகமப்படி 2004-ம் ஆண்டு ஆவணி மாதம் பதினான்காம் தேதி திங்கள் கிழமை 28.06.2004-ல் முதல் மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து 2007-ம் ஆண்டு வைகாசி மாதம் 27-ம் ஞாயிற்றுகிழமை 10.06.2007-ல் இரண்டாம் கும்பாபிஷேகம் சிறப்புடன் அன்னையின் அருளாசியோடு பக்தர்கள் பேராதரவோடும் நடந்தேறி உள்ளது. இவ்வாறாக அன்னையின் வாக்குப்படி கடந்த 2010-ஆம் ஆண்டு உற்சவர் அம்மன் விக்கிரமும் நிர்மாணிக்கப்பட்டு அன்னவாகனத்தில் புறப்பாடுகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இப்படியாக சிறு கொட்டகையில் வளர்ந்த புற்றடியம்மன் ஆலயம், வாக்குப்படி கருவறையாக மாற்றப்பட்டு மூலவர் அம்மன், சுதை வடிவ அம்மன் மற்றும் உற்சவர் அம்மன் என்ற மூன்று வகை அம்மன் திருமேனிகளோடு கூடிய கருவறை மற்றும் விமானமும் மூன்று அடுக்காக உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

அன்னையின் அருள்வாக்கின்படி ஸ்ரீகண்டிநத்தத்தின் கன்னிமூலையில் பிரதான சாலைக்குச்செல்லும் குறுக்கு சாலையின் மேற்குபுறத்தில் புதிதாக இடம்வாங்கி இரண்டு மாத காலத்திற்குள் அருள்மிகு. செல்வ கணபதி ஆலயம் நிர்மானித்து அதன் மஹா கும்பாபிஷேகம் ஆனி மாதத்தில் 6-ம் தேதி 21.06.2012 அன்று நடந்து முடிந்து, முதலாம் ஆண்டு நிறைவாக சிறப்பு யாகமும் பூஜைகளும் நிறைவடைந்துள்ளது. செல்வ கணபதி ஆலய வளாக பகுதியிலிருந்துதான் அன்னைக்கான புறப்பாடு நிகழ்வுகள் மற்றும் ஆடி மாத பால்காவடி, அலகுகாவடி ஊர்வலமும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

கடந்த பதிமூன்று ஆண்டுகளாக வாரத்தில் மூன்று கிழமைகளில் அருள்வாக்கு அம்மா அவர்களின் உருவில் தோன்றி எண்ணற்ற பக்தர்களின் இன்னல்போக்கி இறையருள் புரிந்து அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் காத்துவருகிறாள், அப்படிப்பட்ட பக்தர்களின் பட்டியலில் அடியேனும் ஒருவன் என்பதனை பணிவுடன் தெரிவித்து மகிழ்கிறேன்.

அன்னையின் அருள்வாக்கு தினங்கள்

வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை05.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை வாழும் இறைவுறு ஆன்மீக திலகம் அம்மா அவர்களின் உருவில் அருள்மிகு மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்கள் எழுந்தருள்புரிந்து விபூதி இறைத்து எழும்பிச்சை பழம் பிழிந்து அருளோடு, கோயில் வந்தமர்ந்து காத்திருக்கும் பக்தர்களில் குடும்பத்தில் யாரையாவது ஒருவரை விபூதி, எழும்பிச்சை பழம் வீசி குறிப்பால் அழைத்து கைபிடித்து வருகையின் நோக்கமும், வாழ்வின் நிலையையும், குடும்பத்தின் சூழலையும், மனவேதனையும், உடல் நோய்களையும், உசுப்பிவிடப்பட்ட ஏவல் பில்லி சூனியத்தையும் விபரமாய் எடுத்துரைத்து அதற்கான காரணம், காலம், நிலமை, தீர்வு, பரிகாரம், பலன் என்ற முறையில் அருள்வாக்கு வழங்கி, பரிகாரம் பரிந்துரைத்தும் தேவைப்பட்டால் உடன் செய்தும் காத்‌தருள்புரிந்து வருகிறார்கள்.

இவ்வாறாக இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கருணை கடலாக வந்திருந்து வேண்டுவோர்கள் அனைவருக்கும் வேதனையை போக்கி வேண்டும் வரமருளும் மாபெரும் அருள்நிறை சக்தியாக விளங்கும் மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களின் “ஸ்தல வரலாறு” என்ற இந்நூலை கண்களால் கண்போரும், கைகளில் வைத்து படிப்போரும், படித்தனையும் உணர்ந்ததையும் தொகுத்து மற்றவர்களுக்கு அன்னையின் அற்புதங்களை உறைக்கும் அனைவருக்கும் அன்னையின் அருள் அமோகமாக கிடைக்கப்பெற்று வாழ்வோமாக என்று உறுதி பூண்டு இந்த வரலாற்று படைப்பை அன்னையின் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்.
.

மங்களம் ! சுபமங்களம் !!

அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாதம்மன் ஸ்தல புராண நூலிருந்து….

ஸ்தல புராண நூல் ஆசிரியர்:

பெ. கோவிந்தராஜன். எம்.இ.,
திருவாரூர்.