மார்கழி-தை திருவிழா

Home  >>  திருவிழாக்கள்/சிறப்பு பூஜைகள்  >>  மார்கழி-தை திருவிழா

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து நிவேத்தியம் படைத்து பூஜிக்கப்படுவதோடு காலை மாலை என இரு வேலைகளிலும் பக்திபாடல்கள் ஒலிப்பெருக்கி மூலமாக ஒலிப்பரப்பப்படுகிறது.

மார்கழி மாதத்தில் வரும் ஆங்கில வருட பிறப்பை வரவேற்கும் விதமாக கோயில் வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவில் பன்னிரண்டு மணிக்கு தீபாராதனை நடத்தி வரவேற்கப்படுகிறது. ஜனவரி மாதம் 1-ஆம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு திருக்கோயில் நடைத்திறந்து அருள்வாக்கு அம்மா அவர்களால் திருக்கோயில் திருப்பணியாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கும் நன்கொடைகளின் உபயத்தில் கோ பூஜை நடத்தி, கணபதி ஹோமம் நடத்தி புனித நீரால் அபிஷேகங்கள், அலங்காரம் செய்து தீப வரிசைகள் காட்டி நிவேத்தியம் படைத்து வந்திருக்கும் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஜனவரி 21-ஆம் தேதி அன்னை ஸ்ரீகண்டிநத்ததில் மீண்டும் அவதரித்த தினத்தன்று ஸ்ரீகண்டிநத்தம் அன்னை ஆலயத்தில் காலை முதல் மாலை வரை கோ பூஜையும், அருள்வாக்கு அம்மா அவர்களுக்கு பாத பூஜையும், சுமங்கலி பெண்கள் பங்குபெறும் சுமங்கலி பூஜையும் மாலையில் அன்னை அவர்கள் அம்மா உருவில் எழுந்தருளி வந்திருக்கும் வளர் இளம் பெண்குழந்தைகளில் பாக்கியசாலிகளை தேர்ந்தெடுத்து அழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மஞ்சள் குங்குமம் பூசி அலங்காரம் செய்து அருளோடு அவர்களது மடியில் படுத்து புரண்டு ஆனந்தமாய் “தீர்க்க சுமங்கலி” என்ற அருளாசியும் வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். அன்றைய தினத்தன்று நாக தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷங்களுக்கான தீர்வாக அம்மா அவர்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் அனைத்து தோஷங்களிலிருந்து முழுமையாக விடுதலைப்பெற்று விரைந்து நல்லவை நடக்கவும், மாங்கல்யம் கூடவும், கரு உருவாகி குழந்தைபெறவும் வாழ்த்தும் ஆசீர்வாதமும் பெற்று மனநிறைவடைகிறார்கள். அன்றைய தினத்தன்று வருகைப்புரியும் அனைவருக்கும் அன்னையின் ஆசீர்வாதமும், அன்பும் நிறையவே கிடைப்பதோடு விபூதி, குங்கும பிரசாதங்களும் அருள்வாக்கு அம்மா அவர்களால் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் கடைசி வெள்ளி கிழமையன்று திரளான பெண்கள் பங்குபெறும் சிறப்பு திருவிளக்கு பூஜை ஆலய வளாகத்தில் மாலை வேளையில் விமர்சையாக கொண்டாடப்படும். அன்னைக்கு வாழை இலையின்மேல் பச்சரிசியை பரப்பி அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட ஐந்துமுக பித்தளை குத்து விளக்கினை நடுவில் வைத்து, அதில் ஆலயத்தின் சார்பில் வழங்கப்படும் திரி மற்றும் எண்ணெய் கொண்டு முழுவதுமாக தயாராக, அம்மா அவர்கள் சிறப்பு பூஜை செய்து கற்பகிரகத்தின் உள்ளே முதல் தீபத்தை அன்னை முன் அம்மா அவர்களால் வைத்துள்ள குத்துவிளக்கில் ஏற்றியவுடன் அவரவர் விளக்கினை பெண்கள் ஒன்றாக ஏற்றி வைத்து உரிய திருவிளக்கு மந்திரங்கள், குங்குமம் அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காட்டி, கோயில் சார்பாக சர்க்கரை பொங்கல் பிரசாதம் வைத்து நிவேதியம் செய்து முடித்து அனைத்து பெண்களும் இருகரம் கூப்பி அன்னையை மனத்தில் நினைத்து அமைதியாக தங்களது வேண்டுதலையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருமாறு மனதால் வேண்டுதல் செய்து முடிக்க கோயில் சார்பாக அனைத்து திருவிளக்கிற்கும் தீபாராதனை காட்டி முடிக்க இனிதே நிறைவடைய பெண்களுக்கு அம்மா அவர்களால் பிரசாதம் மற்றும் அன்பளிப்பு பொருள்கள் வழங்கப்படுகின்றது. இறுதியாக வருகை புரிந்துள்ள அனைவருக்கும் அம்மா அவர்களால் அம்மன் பிரசாதம் வழங்கி அன்னதானமும் நடைபெறும்.

இவ்வாறாக வருட பிறப்பினை வரவேற்கும் விதமாகவும் அடுத்து வரும் ஆண்டு முழுவதும் அன்னையின் அருளாசியோடு அனைத்தும் நல்லவிதமாக நடந்தேறவேண்டுமென்ற நோக்கோடு சிறப்பு பிராத்தனை நடைபெறும். அன்றைய தினம் திரளான பக்தர்கள் வந்திருந்து அன்னையை தரிசிப்பதோடு அருள்வாக்கு அம்மா அவர்களுக்கு தங்களின் அன்பினை வெளிப்படுத்தும் விதமாக பொன்னாடைஅணிவித்து, பரிசுபொருட்கள் வழங்கி அம்மாவின் அருளாசிப் பெற்று மணமகிழ்ச்சியோடு செல்கின்றனர்.