மஹா சண்டி ஹோமம்

அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன்அவர்களின் அருள்வாக்கின்படி, அருள்வாக்கு அம்மா அவர்களின் அறிவுரைப்படியும், ஆலய நிர்வாகி அருள்திரு. P.V. இராமமூர்த்தி சுவாமி அவர்களின் தலைமையில் மஹாசண்டீ ஹோமம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான உரிய ஏற்பாடுகள் குறுகிய காலக்கெடுவில் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீகண்டிநத்தம் மஹாசக்தி நாகாத்தம்மன் கோவில் முன்பாக கிழக்கு புறத்தில் ஒரு ஐந்தடி விட்டம் மற்றும் ஆழமுள்ள  யாககுண்டம் அமைக்கப்பட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும், அன்னைக்கு அருள்பெருகும் விதமாக மஹாசண்டி ஹோமம் பெரும் பொருட்செலவில் நன்கொடையாளர்களின் பங்களிப்போடு கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.

மஹாசண்டீ ஹோமம் ஏற்பாட்டு முறைகளை அம்மா அவர்களின் ஆலோசனைப்படியும், சிவாச்சாரியார்களின் கருத்துக்களின்படியும், திருப்பணியாளர்கள் உதவியுடனும், அம்மாவின் ஆசீர்வாதங்களையும் அருளையும் கிடைக்கப்பெற்ற கொடையாளி பக்தர்களாலும் உரிய ஏற்பாடுகள் சீறும் சிறப்போடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

கடந்த ஸ்ரீவிஜய வருடம் மாசி மாதம் 29-ஆம் தேதி வியாழக்கிழமை 13.03.2014 அன்று மஹாகணபதி ஹோமத்துடன் துவக்கப்பட்டு 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.03.2014 அன்று அன்னைக்கு மஹா லட்சார்ச்சனை நடத்தப்பட்டு தொடர்ந்து பங்குனி மாதம் முதல் நாளாம் சனிக்கிழமை 15.03.2014 அன்று மாலை மஹாசண்டீ ஹோமம் துவங்கப்பட்டு மறுநாள் பங்குனி மாதம் 2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 16.03.2014 அன்று காலை முதல் மாலை வரை பதிமூன்று அதிதேவதைகளை எழுந்தருளச் செய்யும் ஹோமங்கள் நடத்தப்பட்டு நிறைவாக இரண்டு பட்டுபுடவைகள் உள்ளடக்கிய மஹா பூர்ணகூர்தி சமர்ப்பிக்கப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டு மூன்று குடங்களில் நிரப்பி வைத்திருந்த புனித நீர் கொண்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேகம்  செய்யப்பட்டு அலங்காரம் செய்து மஹா தீபாரதனை காட்டி பக்தர்களுக்கும், நன்கொடையாளர்களும் அன்னையின் அருளுக்கு பாத்திரமாக்கி இறுதி நாளாம் பௌர்ணமி திதியில் இனிதே நிறைவுச்செய்யப்பட்டது.

 அன்னையின் ஆலய முகப்பில் கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு புறமுள்ள மஹாசண்டீ ஹோம குண்டம் தயார் செய்யப்பட்டு யாகச்சாலை அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டது.

13.03.2014 வியாழக்கிழமை காலையில் அருள்மிகு செல்வகணபதி ஆலயத்தில் மஹாகணபதி ஹோமம் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு அபிஷேகம் செய்து அலங்கரித்து தீபாராதனைகள் நடத்தப்பட்டு மஹாசண்டீ ஹோமம் விழா துவங்கப்பட்டது.

14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று அருள்மிகு. மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களுக்கு சிவாச்சாரியார்களின் கூட்டு முயற்சியால் மஹா லட்சார்ச்சனை காலை முதல் மாலை வரை நிகழ்த்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அம்மா அவர்களின் ஆசியும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

15.03.2014 சனிக்கிழமை பங்குனி மாதம் முதல் நாள் மாலையில் யாகச் சாலைகள் முழுமையாக தயார் செய்யப்பட்டு திரளான சிவாச்சாரியார்களின் கூட்டு பிராத்தனையோடு புனிதநீர் குடங்கள் தீர்த்த கலசங்கள் நிர்மானிக்கப்பட்டு கருவறையிலிருந்து உச்சவர் அம்மனை அம்மா அவர்களால் அழைத்துவரப்பட்டு அனைத்துவிதமான பரிவாரங்களுக்கு நடுவில் எழுந்தருளச் செய்து எட்டு திசைக்கான பரிவார தெய்வங்களும் பிரதிர்ஷ்ட்டை செய்யப்பட்டு உரிய பூஜைகள் செய்து அருள்வாக்கு அம்மா அவர்களால் இரண்டு மிகப்பெரிய அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு மஹாசண்டீ ஹோமம் துவக்க கால பூஜையுடன் துவங்கப்பட்டது.  கணபதி ஹோம பூஜையில் உரிய தேவதைகள், தெய்வங்கள், பரிவார தெய்வங்கள் தேவர்கள என்று அனைவரையும் பிரதிஷ்ட்டை செய்ததோடு தனியாக 64 ரிஷிகளையும் வட்ட வடிவிலும், 64 பைரவர்களை முக்கோண வடிவிலுமான அமைப்பில் எழுந்தருளச் செய்து அவர்களுக்குரிய பலிகளையும் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க திரளாக பக்தர்கள் கூட்டத்தில் அனைத்துவிதமாக ஹோம திரவியங்களையும், பழம், வஸ்திரம், புடவை என்று ஒவ்வொன்றாக சமர்பித்து பூர்ணகூர்தி சமர்பித்து முதல்கால பூஜையை நிறைவு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மஹாசண்டீ ஹோமம் முதல்கால பூஜை நிறைவுப்பெற்றதால் யாகச்சாலையிலேயே உச்சவர் அம்மா அவர்கள் எழுந்தருளி இரவிலும் வீற்றிருந்தார்கள்.  அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு அம்மா அவர்களால் ஏற்றி வைத்து துவங்கப்பட்ட இரண்டு மிகப்பெரிய குத்து விளக்குளும் இரவிலும் தொடர்ந்து எரியுமாறு திருப்பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு பார்த்துக்கொள்ளப்பட்டது.

16.03.2014 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதியில் காலை மஹாசண்டீ ஹோம இரண்டாம் பூஜைகள் துவங்கப்பட்டது.  இரண்டாம் நாள் ஹோமங்கள் துவங்கப்பட்டு அதில் பதிமூன்று அத்தியாத்தையும் சிவாச்சாரியாரில் ஒருவர் எந்தந்த அதிதேவதைகளுக்கான அத்தியாயம் என்பதனையும் அந்த விளக்கத்தினையும், அந்தந்த தேவதைகளை வேண்டுதலால் ஏற்படும் பலன்களும் எடுத்துச்சொல்லி அந்த தேவதைகளுக்கான மந்திரங்களை இரண்டு சிவாச்சாரியார்கள் தொடர்ந்து ஒரு சிவாச்சாரியார்கள் மற்ற சிவாச்சாரியார்களின் உதவியுடன் அனைத்து ஹோம திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்கள், பழங்கள், பொறி பிரசாதங்கள் என்று வரிசைப்படி சமர்பித்து பூர்ண அனுகிரகம் கிடைக்க அனைவரையும் வேண்டுதல் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டு அதற்குரிய ஏற்பாடு செய்தார்கள்.  இதில் இடையில் 12-ஆம் அத்தியாயம் நிறைவடைந்தவுடன் அருள்வாக்கு அம்மாஅவர்களால் இரண்டு திருமணமாகாத ஆண்களுக்கு, ஒரு சுமங்கலிக்கும் பூஜைகள் செய்து அவர்களின் ஆசீர்வாத்தையும் ஏழு வளர் இளம் சிறுமிகளுக்கு அலங்கார பூஜைகள் செய்து அவர்களின் ஆதரவையும் பெற்று அதன் முழுபலனையும் சேர்த்து பதிமூன்றாவதாக இறுதி அத்தியாயமாக மஹாசண்டீ அன்னையை இடைவிடாது சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் மூலமாக எழுந்தருள வேண்டவும் அனைத்து திரவியங்கள் சமர்ப்பித்தும், இறுதியாக திருக்கோவில் சார்பாகவும் நன்கொடையாளர்க சார்பாகவும் இரண்டு முழு நீளப்பட்டு புடவைகள் நெய்யினால் முழுமையாக நனைக்கப்பட்டு அம்மா அவர்களின் திருக்கரங்களால் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டு அதனை சிவாச்சாரியார்கள் பெற்று மங்கள வாத்தியங்களின் மங்கள இசையுடன் இறுதியாக மஹா பூர்ணகூர்தியாக யாக்குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டு அதன் பலன்கள் ஏற்கனவே, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள உச்சவர் அம்மன் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்டிருந்த குடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு முடிக்கப்பட்டது.

இவ்வாறாக பதிமூன்று அத்தியாயமாக பதிமூன்று அதிமுக்கியதேவதைகளை ஹோமத்தில் எழுந்தருளச் செய்து அதன் சக்தியினை புனிதநீர் கலசங்களுக்குள் நிலைநிறுத்தி தீபாரதனைகள் செய்து முடிக்க அதுவரை இரண்டு தினங்களாக எழுந்தருளி அமர்ந்து வேள்வியினை ஏற்ற உச்சவர் அம்மன் அருள்வாக்கு அம்மா அவர்களால் மங்கள வாத்திய இசை முழக்கத்தோடு மீண்டும் கருவறையில் எழுந்தருளச்செய்யப்பட்டது. ஹோமங்கள் என்றால் அதற்குள் சமர்ப்பிக்கும் சமத்துகளுக்கு ஒரு அளவுகோல் வரைமுறை இருப்பதிலிருந்து இந்த மஹாசண்டீ ஹோமம் விலக்கு பெற்றுள்ளதனை கருத்தில் கொண்டு எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.

யாக வேள்வியின் நிறைவாக சக்தியினை தாங்கி இருக்கும் கலச குடங்கள் மூன்று சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து அன்னை ஆலய கருவறையை வலம்வந்து மங்கள வாத்திய முழக்கத்தோடு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன திருமேனிகளின் மூலவர் அம்மன், சுதை வடிவ அம்மன் மற்றும் உச்சவர் அம்மன் விக்கிரங்களுக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. உரிய அலங்காரங்கள செய்து மஹா பிரசாதங்கள வழங்கப்பட்டது.  இதில் மஹா சண்டீஹோம உபயதாரர்களுக்கும், பக்தர்களுக்கும் அம்மா அவர்களால் சிறப்பு கலச பிரசாதங்கள் வழங்கப்பட்டு மாலைகள் அணிவித்தும் மரியாதை செய்தும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டது.  திரளான பக்தர்களுக்கு மதியம் அன்னை ஆலய அன்னதானமும் வழங்கப்பட்டு மஹாசண்டீ ஹோமம் இனிதே நிறைவடைந்த்து.

இந்த மஹாசண்டி ஹோமம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்ற அன்னையின் அருள்வாக்குப்படி உரிய ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றது. அவ்வாறாக மஹாசண்டிஹோமம் நடத்திட பங்களிப்பு வழங்க நினைக்கும் பக்தகோடி பெருமக்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.